இந்தியா

பாகிஸ்தானில் சீக்கியப் பெண் கட்டாயப்படுத்தி மதமாற்றம்: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

செய்திப்பிரிவு

சண்டிகர்
பாகிஸ்தானில் சீக்கிய பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யபட்ட விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள நங்கனா சாகிப் பகுதியில் சீக்கிய குருத்வாரா தலைவர் பகவான் சிங். அவரது மகள் ஜகஜித் சிங் (வயது 19). கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஜகஜித் கவுரை கடத்திச் சென்ற கும்பல் அவரை கொடுமை படுத்தியதுடன். துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. ஆயிஷா என பெயர் மாற்றப்பட்ட ஜகஜித் கவுர், இஸ்லாமியர் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பேசும் வீடியோ காட்சி ஒன்றையும் அந்த கும்பல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பஞ்சாப் மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அம்ரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானின் நங்கரா சாஹிப்பில் சீக்கிய இளம் பெண் கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கேட்டுக் கொள்கிறேன்.
அதுபோலவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT