பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை: கொலிஜியம் முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 31லிருந்து 34நீதிபதிகளாக உயர்த்திக்கொள்ள திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த 4 நீதிபதிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜஸ்தான் மற்றும் கேரளா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான கொலிஜியம் முடிவு செய்துள்ளது.

இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ரவிந்திர பாட், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இந்த 4 நீதிபதிகளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றால் நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயரும்.


பிடிஐ

SCROLL FOR NEXT