இந்தியா

ஸ்ரீநகரில் தாரிகாமியை 3 மணிநேரம் சந்தித்து பேசினார் யெச்சூரி

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்
உச்ச நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்ரீநகர் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது கட்சி நிர்வாகி முகமது தாரிகாமியை 3 மணிநேரம் சந்தித்து பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகளை காஷ்மீர் நிர்வாகம் ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகாமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரை பார்க்க தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சென்று நண்பர்களை, உறவினர்களை சந்திக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சீதாராம் யெச்சூரி தாராளமாக சென்று தனது நண்பரை பார்க்கலாம். ஆனால் அரசியல் நிகழ்வு எதிலும் அவர் பங்கேற்க கூடாது’’ என உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து சீதாராம் யெச்சூரி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அவர் பிற்பகல் வந்து சேர்ந்தார். பின்னர் ஸ்ரீநகர் குப்கர் சாலையில் உள்ள தாரிகாமியின் வீட்டுக்கு யெச்சூரி சென்றார். அவரது வீட்டில் 3 மணிநேரம் தங்கி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக ஸ்ரீநகர் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு டெல்லி திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT