உபியின் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பூர் கிராமத்தில் மதிய உணவின்போது தனியே அமரவைக்கப்பட்டுள்ள தலித் மாணவர்கள். | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

உ.பி. பள்ளியில் தலித் மாணவர்கள் இடையே சாதிப் பாகுபாடு: மாயாவதி கண்டிப்பு

செய்திப்பிரிவு

லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் தலித் மாணவர்களுக்கு தனியே மதிய உணவு பரிமாறப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரியுள்ளார்.

பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சாதிப் பிரிவினைக்கு ஆளாகியுள்ளனர். மதிய உணவின்போது அவர்கள் தனித்தனியே அமரவைத்து உணவு பரிமாறப்பட்ட விவகாரம் உ.பி.யில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராம்பூர் கிராமத்தில் உள்ள இந்தத் தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் உணவுக்காக தங்கள் தட்டுகளை வீட்டிலிருந்து கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், பின்னர் உணவு பரிமாறும் போது தனித்தனியாக அமரும்படி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தலித் மாணவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், "பள்ளியில் வழங்கப்பட்டுள்ள தட்டுகளில் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், நாங்கள் எங்கள் சொந்தத் தட்டுகளைக் கொண்டு வருகிறோம்" என்றார்.

தொடக்கப் பள்ளியின் முதல்வர் பி. குப்தா கூறுகையில் ''இங்கு உயரதிகாரிகள் வந்திருந்தபோது சாதி அடிப்படையில் வேறுபாடு காட்ட வேண்டாம் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகும் இங்கு இந்த நடைமுறை தொடர்கிறது'' என்று ஒப்புக்கொண்டார்.

"நாங்கள் மாணவர்களை ஒன்றாக அமர்ந்து ஒன்றாகச் சாப்பிடச் சொல்கிறோம், ஆனால் நாங்கள் கிளம்பியவுடன் அவர்கள் தனித்தனியே பிரிந்துவிடுகிறார்கள். அனைவரும் சமம் என்று நாங்கள் அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் வலிமையானவை. இந்த ஊரைச் சேர்ந்த உயர் சாதி மாணவர்கள் அவர்களுடன் தலித் பிரிவு மாணவர்களை அமர அனுமதிக்க மாட்டார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உ.பி.யின் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலித் மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணும் செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய இழிவான இனவெறிப் பாகுபாடு காண்பவர்கள் மீது மாநில அரசு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகுபாடு காட்டும் பள்ளி அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ளும் விதமாக இருக்கவேண்டும். மீண்டும் அந்தத் தவறை யாரும் செய்யக்கூடாது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT