மும்பை, பிடிஐ
பீமா-கோரேகான் வழக்கில் வன்முறையைத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வெர்னன் கொன்சால்வேஸ் விவகாரத்தில் டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் குறித்த கேள்வியை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பினார்.
எல்கர் பரிஷத்-பீமா கோரேகான் வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சரங் கோட்வால், குற்றம்சாட்டப்பட்ட கொன்சால்வேஸ் மற்றும் பிறரது ஜாமீன் மனு கோரிக்கையை விசாரித்தார், அப்போது கொன்சால்வேஸ் வீட்டிலிருந்து போலீஸார் கைப்பற்றிய ‘ஆட்சேபணைக்குரிய’ பொருட்களில் சில சிடிக்கள், சிலபல புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன, அதில் லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ என்ற நாவலும் கைப்பற்றப்பட்டது. இதனை போலீஸ் தரப்பில் குற்றமிழைப்பதற்கான ஆதாரமாக காட்டியுள்ளனர்.
நெப்போலியப் போர்கள் காலக்கட்டத்தில் லியோ டால்ஸ்டாய் எழுதிய இந்த போரும் அமைதியும் என்ற நாவல் புகழ்பெற்ற ரஷ்ய நாவல் வரிசையில் முதன்மை வகிப்பதாகும்.
இந்த வழக்கைக் கையாளும் புனே போலீஸ் கொன்சால்வேஸ் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பிற நூல்கள், சிடிக்கள்,ஆகியவற்றின் தலைப்புகளையும் குறிப்பிட்டனர்.
இதில் கபிர் கலா மஞ்ச்சின் ராஜ்ய தமன் விரோதி, மார்க்சிஸ்ட் ஆர்கைவ்ஸ், ஜெய்பீமா காம்ரேட், போன்ற சிடிக்களும் போரும் அமைதியும், மாவோயிஸ்ட்களை புரிந்து கொள்ளுதல், ஆர்சிபி ரிவியூ ஆகிய புத்தகங்கள் தவிர நேஷனல் ஸ்டடி சர்க்கிள் வெளியிட்ட சுற்றறிக்கைகளின் நகல்கள் ஆகியவை கொன்சால்வேஸ் வீட்டிலிருந்து புனே போலீசார் கைப்பற்றினர்.
“உங்கள் சிடி ‘ராஜ்ய தமன் விரோதி’ என்ற தலைப்பே அரசுக்கு எதிராக ஒலிக்கிறதே, போரும் அமைதியும் என்பது இன்னொரு நாட்டு போரைப் பற்றியது. ஏன் இப்படிப்பட்ட ஆட்சேபணைக்குரிய புத்தகங்களான போரும் அமைதியும் போன்ற புத்தகங்களை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இதனை கோர்ட்டுக்கு விளக்கத்தான் வேண்டும்.
எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக வன்முறையைத் தூண்டியதாக பல சமூகச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 31, 2017 அன்று இவர்கள் மக்களிடம் வன்முறை உணர்வைத் தூண்டுமாறு பேசியதாக போலீஸார் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அன்றைய தினம் மூண்ட சாதி வன்முறைக்கு இவர்கள் பேச்சும் ஒரு காரணம் என்பதே போலீஸார் தரப்பு வாதமாக இருக்கிறது.
பரிஷத்தைக் கூட்டியதன் பின்னணியில் நக்சல்கள் தொடர்பிருக்கிறதா என்பதை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட மற்ற சமூகச் செயல்பாட்டாளர்கள், ஷோமா சென், ரோனா வில்சன், சுதா பாரத்வாஜ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா ஆகியோர்களாவார்கள்.
கொன்சால்வேஸ் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தன் வாதமாக முன்வைத்ததாவது, கொன்சால்வேஸ் மீதான குற்றச்சாட்டை மற்றவர்களுக்கு வந்த மின்னஞ்சல்கள், கடிதங்கல் மூலமே போலீஸார் குறிப்பிடுகின்றனர். கொன்சால்வேசிடமிருந்து ஆதாரங்கள் எதையும் போலீஸார் திரட்டவில்லை, என்றார். ஆனால் புனே போலீஸ் அவர் வன்முறையைத் தூண்டியதற்கான ஆதாரங்கள் அடங்கிய சிடிக்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் மிஹிர் தேசாய், ‘இந்தப் புத்தகங்கள், சிடிக்களை ஒருவர் வைத்திருக்கிறார் என்பதாலேயே அவரைத் தீவிரவாதி என்று குற்றவாளியாக்க முடியுமா?’ என்றார் இவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, போலீஸார் அந்த சிடிக்களில் என்ன உள்ளது என்பதை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும் என்று கூறியதோடு, அவை வெற்று சிடிக்களாக இருக்கவும் வாய்ப்பிருக்கதல்லவா என்று கூறினர்.
கொன்சால்வேஸ் தரப்பு எப்படி விளக்க வேண்டுமோ, போலீஸாரும் ‘நிறைய விளக்கம்’ அளிக்க நேரிடும். அப்போதுதான் கோர்ட் இதை ஏற்கும் இல்லையெனில் இதை சாட்சியாக கோர்ட் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் இது வரை போலீஸாரால் சிடியிலோ, புத்தகத்திலோ என்ன உள்ளது என்பதை ஆதாரமாக காட்ட முடியவில்லை, எனவே அதில் என்ன இருக்கிறது என்பதை சோதித்தீர்களா, வெற்று சிடிக்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று நீதிபதிகள் கேட்டனர்.
மஹர்கள் அடங்கிய பிரிட்டிஷ் ராணுவம் உயர் ஜாதி பேஷ்வாக்களை தோற்கடித்ததை தலித்கள் கொண்டாடுவது வழக்கம், இதில்தான் வன்முறை நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.