காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. தடை உத்தரவு படிப்படியாக திரும்பப்பெறப்பட்டு வருவதால் அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. ஸ்ரீநகரின் முக்கிய சாலையில் நேற்று வாகனங்கள் வழக்கம் போல இயங்கின.படம்: ஏஎப்பி 
இந்தியா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள்; 5 நீதிபதி அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: அக்டோபரில் விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான மனுக்களை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அரசியல் சாசன சட்டத்தின் 370-வது பிரிவு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. இதன் காரணமாக பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது. அதேபோல், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அங்கு செல்லு படியாகும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார். அத்துடன், காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் படும் என்றும் மத்திய அரசு அறி வித்தது. இது தொடர்பான மசோதா மற்றும் தீர்மானத்துக்கு நாடாளு மன்றம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து முதலில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் காஷ் மீரைச் சேர்ந்த வழக்கறிர் ஷாகிர் ஷபிரும் அவருடன் இணைந்து கொண்டார். மேலும் காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சியான தேசிய மாநாடு (என்சி) சார்பில் கடந்த 10-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில், “காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர் பான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததும், குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததும் சட்டவிரோதமானது. எனவே, இந்த நடவடிக்கை செல்லாது என அறி விக்க வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.

இதுதவிர, பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரிகள் குழு, காஷ் மீரில் ஐஏஎஸ் அதிகாரி பணியை துறந்து அரசியல் கட்சி தொடங்கிய ஷா பாசல் உள்ளிட்ட பலர் காஷ்மீர் நடவடிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரிசீலனை செய்தது.

அப்போது, மத்திய அரசு சார் பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

தாக்கம் ஏற்படுத்தும்

கே.கே.வேணுகோபால் வாதி டும்போது, “அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு பிரச்சினை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக இங்கு வாதிடப் படும் கருத்துகளை ஐ.நா.சபையின் கவனத்துக்கு சிலர் அனுப்பி வைப் பார்கள். எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஷ்வனி குமார், “உச்ச நீதிமன்றம் தனது கடமையை செய்யக்கூடாது என் கிறீர்களா?” என கேள்வி எழுப்பி னார்.

இருதரப்பு வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “எங்கள் கடமை பற்றி எங்களுக்கு தெரியும். 370-வது பிரிவு தொடர் பான அனைத்து மனுக்களும் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத் துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடு கிறோம். வரும் அக்டோபர் மாதம் விசாரணை தொடங்கும்” என்றார்.

காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் செயல் ஆசிரியர் அனுராதா பாசின் மற்றும் காங்கிரஸ் செயற்பாட்டாளர் தெசீன் பூனவாலா ஆகியோர், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தனித்தனி யாக மனுக்களை தாக்கல் செய் துள்ளனர். அதில், “காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதையடுத்து செல்போன், இணையதளம் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவை முடக்கம் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இதனால் ஊடகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. செய்திகளை மக் களுக்கு கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. பத்திரிகையாளர் கள் சுதந்திரமாக எல்லா இடங் களுக்கும் செல்லவும் முடிய வில்லை. இந்தத் தடைகளை நீக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் தொடர் பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத் துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசியல் தலைவர்கள் விடுவிப்பு

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டதை யடுத்து, போராட்டம், வன்முறையை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உட்பட 173 பேரை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இப்போது காஷ்மீரில் பதற்றம் தணிந்து வருவதால், தடுப்புக் காவலில் உள்ள அரசியல் தலைவர் களை படிப்படியாக விடுவிக்க மாநில போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட் டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என காஷ்மீர் காவல் துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இதனிடையே, காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் என ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT