புதுடெல்லி,
முன்னாள் நிதியமைச்சர்ப.சிதம்பரத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீனை மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஒய்வுக்குப்பின், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுனில் கவுர் கடந்த வியாழக்கிழமையோடு முறைப்படி ஓய்வு பெற்றார். ஓய்வுப்பெற்ற அடுத்த வாரத்திலேயே, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக சுனில் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழ் 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக செப்டம்பர் 23-ம் தேதி சுனில் கவுர் பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கவுல், மனுவை தள்ளுபடி செய்து, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முக்கியக் சதிகாரராக ப.சிதம்பரம் கருதப்படுகிறார் என்று தனது தீர்ப்பில் நீதிபதி சுனில் கவுர் கடுமையாக குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற வேண்டிய நிலை சிதம்பரத்திற்கு ஏற்பட்டது. ஆனால் அங்கு பட்டியலிடப்படாததால் ஜாமீன் கிடைக்காத நிலையில் மறுநாள் சிபிஐ அவரை கைது செய்து தற்போது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரத்துக்கான ஜாமீன் மனுவும் விசாரணையில் இருக்கிறது.
ப.சிதம்பரத்துக்கு மட்டுமல்ல, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் விசாரிக்க பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்த நிலையில், அதை தனது உத்தரவுகள் மூலம் அரசு விசாரணைக்கு வழிஏற்படுத்திக்கொடுத்தவர் நீதிபதி சுனில் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருகமனும், மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரதுல் பூரிக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கில் முன்ஜாமீனை மறுத்தார். இதனால்தான் அவர் வேறுவழியின்றி சரண் அடைய முடிவு செய்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் இறைச்சி ஏற்றுமதியாளர் மெயின் குரோஷிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கையும் நீதிபதி சுனில் கவுர் கையாண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார்
கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பிறந்த சுனில் கவுர், தனது சட்டப்பணியை முதலில் பஞ்சாபிலும், அதன்பின் 1984-ம் ஆண்டு ஹரியானா உயர் நீதிமன்றத்தில் இருந்தும் தொடங்கினார். கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிமன்ற பணியில் இணைந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற சுனில் கவுர், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நிரந்தர நீதிபதியாக உயர்ந்து பணியாற்றி கடந்த 22-ம் தேதி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்