இந்தியா

இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம்: அமித் ஷா

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயர்ந்து நாடு வல்லரசாக மாற வேண்டுமானால் தேசத்தின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்வது அவசியம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

டெல்லியில் நடந்த காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் 49-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக மாற்ற வேண்டும் என விரும்புகிறார். இதற்கு தேசத்தின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்வது மிகவும் அவசியம். உள்நாட்டு பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பது என இரண்டிலு கவனம் செலுத்த வேண்டும்.

தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் இதுவரை 34,000 காவலர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்துள்ளனர். காவல்துறை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு ஏற்ப துறை ரீதியான சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியம்.

இந்திய பீனல் கோடு மற்றும் குற்றவியல் தண்டனை சட்டங்களிலும் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர நாடு தழுவிய விவாதங்களை மேற்கொள்வது அவசியம்.

தடயவியல் சார்ந்த படிப்புகளை மேம்படுத்தும் வகையில் தடய அறிவியல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தடயவியல் துறை மேம்படுத்தப்பட்டால் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும்.
புலன் விசாரணைகளில் அறிவியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். காவல்துறையை நவீனமயமாக்குதல் என்பது சரியான முறையி மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT