லக்னோ ரயில்நிலையம் 
இந்தியா

லக்னோ ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்க தடை: தூய்மை என்ற பெயரில் அபத்தம்; பயணிகள் வருத்தம்

செய்திப்பிரிவு

லக்னோ

ரயில் நிலையத்தை சுற்றிலும் தூய்மையற்ற நிலையில் அசுத்தம் பரவி வருவதால் அங்கு வாழைப்பழம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறிசெயல்படும் எவரும் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் சிறுவியாபாரிகள், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தூய்மை என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள இத்தடைக்கு பொதுமக்களிடம் வரவேற்பில்லை என்று கூறப்படுகிறது.

சர்பாக் ரயில்நிலையத்தில் வாழைப்பழம் வியாபாரம் செய்துவந்த சிறு வியாபாரி ஒருவர் கூறுகையில், "நான் கடந்த ஐந்தாறு நாட்களாக வாழைப்பழங்களை விற்கவில்லை. காரணம் ரெயில்வே நிர்வாகம் இங்கு அதன் விற்பனையை தடை செய்துள்ளது. மற்ற பழங்கள் விலை அதிகம் என்பதால் ஏழை மக்கள் பெரும்பாலும் வாழைப்பழத்தைத்தான் அதிகம் விரும்பி வாங்கிச் செல்வார்கள்.'' என்று தெரிவித்தார்.

லக்னோவிலிருந்து கான்பூருக்கு தினமும் ரயிலில் சென்றுவரும் அரவிந்த் நாகர் பேசுகையில், "வாழைப்பழங்கள் மிகவும் மலிவானது மட்டுமில்லை. பயணத்தின் போது ஒருவர் உட்கொள்ளக்கூடிய ஓர் ஆரோக்கியமான, பாதுகாப்பான பழமாகும். வாழைப்பழங்கள் அசுத்தத்தை உருவாக்குகின்றன என்று சொல்வது அபத்தமானது.

அது உண்மையாக இருந்தால், அங்கு அதிகபட்ச அசுத்தம் உருவாகும் என்பதால் கழிவறைகளையும் தடை செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட தின்பண்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

பழம் ஒருபக்கம் நமக்கு உகந்தது என்றால் இன்னொரு பக்கம் வாழை தோல்கள் ஆர்கானிக் என்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்ததாதவை. தவிர ஏழைகளுக்கு ஊட்டச்சத்துக்கான மலிவான ஆதாரமாக வாழைப்பழங்கள் உள்ளன'' என்றார்.

SCROLL FOR NEXT