காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி : கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸை விட்டு செல்ல நினைப்பவர்கள் செல்லலாம்: ஜெய்ராம் ரமேஷ், சசிதரூருக்கு வீரப்ப மொய்லி மறைமுக எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பெங்களூரு,

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, அதன் கொள்கைகள் செயல்படாமல் போனதற்கு ஜெய்ராம் ரமேஷ்தான் பொறுப்பேற்க வேண்டும், கட்சியை விட்டு செல்ல நினைப்பவர்கள் தாராளமாக செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி காட்டமாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி குறித்து பேசி இருந்தார். அதில் " பிரதமர் மோடியை மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருவது சரியல்ல. பிரதமர் மோடி செய்யும் நல்ல காரியங்கள், திட்டங்களையும் நாம் ஆதரிக்க வேண்டும்.

நல்ல திட்டங்கள் செய்ததால்தான் அவரை மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளார்கள். ஆதலால், திட்டங்களை ஆதரித்த பின் அவர்மீது விமர்சனங்களை வைக்கவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை மூத்த தலைவர் சசி தரூரும் ஆதரித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இரு தலைவர்களின் கருத்துக்கு கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டது. சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் இருவரும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியது மிகவும் மோசமான ரசனை. இந்த கருத்து மூலம் இருவரும் சேர்ந்து பாஜகவுடன் தங்களை சமரசம் செய்து கொள்ள முயல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவரும் இதுபோன்ற கருத்தைக் கூற விரும்பினால், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும் சேவை செய்யமாட்டார்கள் என்பதே எனது கருத்து. ஏனென்றால், அமைச்சராக இருந்து அதிகாரத்தை அனுபவித்துவிட்டு, எதிர்க்கட்சியாக வந்தவுடன், ஆளும் கட்சிக்கு பாலமாக இருக்க முயல்கிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2-வது அரசில் கொள்கைகள் பலநேரங்களில் செயல் இழந்ததற்கும், பல நேரங்களில் அரசின் கொள்கை நிர்வாகம் செயல் இழந்ததற்கும் ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு ஏற்க வேண்டும்.

சசிதரூர் கருத்தைப் பார்த்தால் அவரை ஒருபோதும் முதிர்ச்சியான அரசியல்கட்சித் தலைவராக கருத முடியாது. சசி தரூர் அடிக்கடி கூறும் கருத்துக்கள், அறிக்கைகள் நாளேடுகளிலும், ஊடகங்களிலும் அவரின் பெயர் இடம் பெற வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது.

சசிதரூர் மோடி குறித்து பேசியதற்கு அதிக கவனம் கொடுக்கமாட்டேன். இதுபோன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைவிட்டு செல்ல நினைப்பவர்கள் நேரடியாகக் கூறிவிட்டுச் செல்லாம். அதற்காக கட்சிக்குள் இருந்து கொண்டே, காங்கிரஸ் கட்சியையும், சித்தாந்தத்தையும் நாசப்படுத்த வேண்டாம்.

மாநில அளவிலும், உயர்மட்ட அளவிலும் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து, கட்சிக்கு புத்துயிரளிக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைமைக்கு இருக்கிறது இதற்கு மாற்று ஏதும் இல்லை.

அடுத்து 3 மாநிலங்களில் தேர்தல் வருவதால், இந்த நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம் கூடாது. தேர்தலைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் மன்னிப்பு அளிக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியை பாஜக மரியாதையுடனும், அச்சத்துடன் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகள் குறித்து பாஜகவுக்கு பயம் இருக்காது. இவ்வாறு வீரப்பமொய்லி தெரிவித்தார்.

பிடிஐ

SCROLL FOR NEXT