இந்தியா

மாயமான ஆந்திர சட்டப்பேரவை மர சாமான்கள் முன்னாள் சபாநாயகர் வீடு, ஷோரூமில் மீட்பு

செய்திப்பிரிவு

ஆந்திர சட்டப்பேரவை இடமாற்றத்தின்போது மாயமான மேசை உள்ளிட்ட மர சாமான்கள் முன்னாள் சபாநாயகரின் வீடு மற்றும் அவரது மகனின் ஃபர்னிச்சர் ஷோரூமில் இருந்து மீட்கப்பட்டன.

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின்போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத். ஆந்திரா - தெலுங்கானா பிரிவினையின்போது ஹைதராபாத்திலிருந்த பொருட்கள் அமராவதி சட்டப்பேரவை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டன.

அப்போது ஏராளமான ஃபர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது. ஆனால் அது பெரிய சர்ச்சையாகவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் பேரில் டி.எஸ்.பி. பிரபாகர் ராவ் விசாரணை மேற்கொண்டார். இதில் சட்டப்பேரவை பொருட்கள் அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத்தின் வீடு மற்றும் அவரது மகனின் ஃபர்னிச்சர் ஷோரூமுக்கு அனுப்பி வைத்து, அவற்றை உபயோகப்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கோடலா சிவபிரசாத் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒருகட்டத்தில் பொருட்களை வீட்டுக்கு மாற்றியதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், அவற்றைத் திருடவில்லை. குண்டூரில் அமையவிருந்து புதிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிகாரிகளை வந்து எடுத்து செல்லுமாறு கூறியும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் பொருட்களை எடுத்துச் செல்லலாம். அல்லது அதற்கான பணத்தை தரக்கூட தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில்தான் இன்று (செவ்வாய்க்கிழமை) கோடலா சிவபிரசாத்தின் மகன் பர்னிச்சர் ஷோ ரூமில் இருந்து, சட்டப்பேரவையின் மரசாமான்களை போலீசார் மற்றும் பேரவை அலுவலர்கள் தற்போது மீட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT