புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை கைது செய்யும் தடையை புதன்கிழமை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை நாளையும் தொடரும் என்று நீதிபதி பானுமதி, நீதிபதி போபண்ணா அமர்வு தெரிவித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ அமைப்பால் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 4 நாட்கள் சிபிஐ காவலில் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவு தனியாக ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இன்றுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், அமலாக்கப்பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக ப.சிதம்பரத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, 2019 ஜனவரி 1-ம் தேதி, ஜனவரி 21-ம் தேதிகளில் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளின் நகல்களை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டு ப.சிதம்பரத்திடம் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
மேலும், ப.சிதம்பரத்தை சிபிஐ அமைப்பு கைது செய்து இருப்பதை ரத்து செய்யக்கோரும் மனுவும் இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது்.
இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு, " ப.சிதம்பரத்தை புதன்கிழமை(நாளை) வரை அமலாக்கப்பிரிவு கைது செய்யத் தடை விதித்தனர். நாளை இந்த மனு மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும், அப்போது, சிபிஐ கைதை ரத்து செய்யக்கோரும் மனுவும் சேர்ந்து விசாரிக்கப்படும்" என்று கூறி நாளைக்கு ஒத்திவைத்தனர்.
அதேபோல, அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜராகிய சொலிசி்ட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கி்ல் தனது தரப்பு பதிலை புதிதாக நாளை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
ஏற்கனவே ப.சிதம்பரத்துக்கான சிபிஐ காவலில் வரும் 30-ம் தேதிவரை நீட்டித்து சிபிஐ விசாரணை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ