இந்தியா

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கியவர் கர்நாடகாவின் துணை முதல்வரானார்

செய்திப்பிரிவு

பெங்களூரு,

கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த சர்ச்சையில் சிக்கியவர் தற்போது அம்மாநில துணை முதல்வராகியுள்ளார்.

கர்நாடகாவில் துணை முதல்வராக கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன், லக்‌ஷ்மண் சங்கப்பா சாவடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் லட்சுமண் சங்கப்பா சவதி, கர்நாடக எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பேரவைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த சர்ச்சையில் சிக்கியவர். அவருடன் சட்டப்பேரவையில் ஆபாச வீடியோ பார்த்ததாக சிக்கிய சி.சி.பாட்டீல், கிருஷ்ணா பலீமர் ஆகியோர் அப்போது அமைச்சர்களாக இருந்தனர். சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் சவதி துணை முதல்வராகியுள்ளார்.

லக்‌ஷ்மண் சங்கப்பா சாவடியை துணை முதல்வராக நியமித்ததற்கு பாஜகவுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏன்? என்று எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு துணை முதல்வர் லட்சுமண் சங்கப்பா சவதி அளித்த பேட்டியில், "தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களே என் மீது நம்பிக்கை கொண்டு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளனர். நான் கட்சியை வலுப்படுத்துவேன். அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத்தருவேன். எந்தப் பதவியையும் நான் கேட்கவில்லை. மூத்த தலைவர்கள் கொடுத்தார்கள்" எனக் கூறியுள்ளார்.

பதவிக்குக் காரணம் இதுதானா?

இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணியை வலுவிழக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றியதாலேயே லட்சுமண் சங்கப்பா சவதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதாக கர்நாடகா அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,வாக இருந்த ரமேஷ் ஜரகிஹோலியுடன் கைகோத்து 6-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களை கட்சித் தாவச் செய்யவைத்தால் சாவடிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தேர்தலில் தோல்வியுற்றாலும் லிங்காயாத் சமூகத்தினர் மத்தியில் அந்தஸ்தில் இருக்கிறார் லட்சுமண் சங்கப்பா சவதி. சாதி பலமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT