அமெரிக்காவால் அளிக்கப்படும் அழுத்தம் இந்தியாவுடனான நீண்ட நாள் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செக்கேனி இந்தியா வந்திருக்கிறார். (இன்று ) திங்கட்கிழமை கருந்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற அவர் அமெரிக்கா அளிக்கும் தொடர் அழுத்தம் இந்தியாவுடனான ஈரானின் உறவை பாதிக்காது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “அமெரிக்கா தொடர் பொருளாதார தடைகளால் உண்டாகும் அழுத்தம் இந்தியாவுடனான எங்களது பாரம்பரியமான நீண்ட நாள் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தியா - ஈரான் இடையேயான உறவு உயர்ந்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
மேலும் அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது செலுத்தும் பொருளாதாரத் தடைகளையும் அவர் விமர்சித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் ஈரான் இதனை மறுத்து வந்தது.
இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.