புதுடெல்லி
''பி.வி.சிந்துவின் வெற்றி இளம் வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்'' என்று உலக பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பாஸஸ் நகரில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கலந்துகொண்டு பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். சீனாவின் சென் யூ ஃபீவை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்து போட்டியின் இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றின்போது 21-7, 21-7 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை நேர் ஆட்டங்களில் தோற்கடித்து சிந்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
''அதிசயம்மிக்க திறமைசாலி @ பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளார்! பிடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். பேட்மிண்டன் மீதுள்ள அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் உற்சாகம் தருகிறது. பி.வி சிந்துவின் வெற்றி இளம் தலைமுறை வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்''
இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.