புதுடெல்லி
டெல்லியில் மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தமிழக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்
பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (சனிக்கிழமை) பிறபகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.
நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அருண் ஜேட்லியின் கைலாஷ் காலனி இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இன்று காலை டெல்லியில் தீன் தயால் உபாத்யயா மார்க்கில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
அப்போது அவர்மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. பாஜக அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் நண்பகல் ஒருமணிவரை கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாஜக தொண்டர்கள் மற்றும் அனுதாபிகள் கட்சி தலைமையகத்திற்கு வெளியே காலையில் இருந்து வரிசையில் நின்று தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அருண் ஜேட்லியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதுபோலவே திமுக எம்.பி. தயாநிதி மாறனும் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் அருண் ஜேட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அருண்ஜெட்லி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.