புதுடெல்லி
புதுடெல்லியில் உள்ள நிகாம்போத் இடுகாட்டில் அரசியல் தலைவர்கள், அபிமானிகள், கட்சித் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் இன்று செய்யப்பட்டது.
பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (சனிக்கிழமை) பிறபகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.
நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அருண் ஜேட்லியின் கைலாஷ் காலனி இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இன்று காலை டெல்லியில் தீன் தயால் உபாத்யயா மார்க்கில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
அப்போது அவர்மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. பாஜக அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் நண்பகல் ஒருமணிவரை கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாஜக தொண்டர்கள் மற்றும் அனுதாபிகள் கட்சி தலைமையகத்திற்கு வெளியே காலையில் இருந்து வரிசையில் நின்று தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரும்திரளான மக்கள்
ஜேட்லியின் உடல் அங்கிருந்து மலர் அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் ஜேட்லியின் புகழ்வாசகங்கள் முழங்க தகன மைதானம் அமைந்துள்ள யமுனை ஆற்றங்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள நிகாம்போத் காட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
மறைந்த தலைவரின் இறுதிச் சடங்கின்போது, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் செயல் தலைவர் ஜே பி நாட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி மற்றும் அனுராக் தாக்கூர்; பாஜக எம்.பி.க்கள் விஜய் கோயல் மற்றும் வினய் சஹஸ்ரபுத்தே; காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, கபில்சிபல் ஆகியோர் தகன மைதானத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி மரியாதையின்போது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, பீகார், கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் முதல்வர்களும் பங்கேற்றனர்.