அருண் ஜேட்லி : கோப்புப்படம் 
இந்தியா

நேரடிதேர்தலில் ஈடுபடாமல் அரசியலில் கோலோச்சிய அருண் ஜேட்லி

க.போத்திராஜ்


தேர்ந்த அரசியல்வாதி, முன்னாள் அட்டர்னி ஜெனரல், முன்னாள் மத்திய அமைச்சர், சிறந்த பேச்சாளர், முற்போக்குவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் அருண் ஜேட்லி(வயது66).

நேரடித்தேர்தலில் வெல்லமுடியாவிட்டாலும் கூட அரசியலில் கோலோச்சி தனக்கென அருண் ஜேட்லி தனிமுத்திரை பதித்திருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரை பலமுறை பல்வேறு துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவர் அருண் ஜேட்லி.

நிதியமைச்சராக, பாதுகாப்புதுறை அமைச்சராக, கார்ப்பரேட் விவகாரம், சட்டத்துறை, தொழில்துறை என பலதுறைகளுக்கு பொறுப்பு வகித்தவர் ஜேட்லி. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக 2009 முதல் 2014-ம் ஆண்டுவரையிலும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த, தேர்ந்த வழக்கறிஞராகவும் அருண் ஜேட்லி அறியப்பட்டவர்.
கடந்த 1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் அருண் ஜேட்லி. ஜேட்லியின் தந்தை மகாராஜ் கிஷன் ஜேட்லி வழக்கறிஞர், தாய் ரத்தன் பிரபா ஜேட்லி குடும்பத் தலைவியாக இருந்தார்.

இளமைக் காலம்

1957 முதல் 1969 வரை டெல்லியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஜேட்லி, டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் வணிகவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் டெல்லி பல்கலையில் கடந்த 1977-ம்ஆண்டு எல்எல்பி பட்டம் முடித்தார்.

டெல்லி பல்கலையில் படிக்கும் போதே அரசியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். ஏபிவிபி அமைப்பின் மாணவர் தலைவராக டெல்லி பல்கலையில் இருந்த ஜேட்லி, கடந்த 1974-ம் ஆண்டு மாணவர் அமைப்பு தலைவராக உயர்ந்தார்.

எமர்ஜென்ஸி சிறைவாசம்

கடந்த 1975 ஆண்டில் காங்கிரஸ் கொண்டுவந்த அவசரநிலையை எதிர்த்து ஜேட்லி கடுமையான போராட்டங்களை நடத்தினார். இதனால் அப்போதைய அரசு, ஜேட்லியை கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைத்தது. அதுமட்டுமல்லாமல் ஜெயப்பிரகாஷ் நாராயண் உருவாக்கிய ஊழலுக்கு எதிரான அமைப்பிலும் ஜேட்லி ஈடுபட்டு பிரபலமாகினார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜேட்லியை அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயண் நியமித்தார். மக்கள் உரிமைகளுக்காக அதிகமான ஈடுபாட்டுடன் இருந்த அருண் ஜேட்லி பியுசிஎல் பத்திரிகையை சதீஸ் ஜா, ஸ்மிதி கோதாரியுடன் சேர்ந்து உருவாக்கி, வெளியேவர காரணமாக அமைந்தார்.

அரசியல் அறிமுகம்

எமர்ஜென்ஸி முடிந்தபின் சிறையில் இருந்து வெளியேவந்த அருண் ஜேட்லி ஜன சங்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சிக்குப்பின் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த நேரத்தில் லோக்தந்ரிக் யுவ மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளராகவும், டெல்லி்யின் ஏபிவிபி தலைவராகவும், அனைத்து இந்திய செயலாளராகவும் ஜேட்லி பதவி வகித்து மக்களால் எளிதாக அறியப்பட்டார்.

அதன்பின் பாஜக உருவானவுடன் இளைஞர் அமைப்பின் தலைவராகவும், 1980-களில் டெல்லியின் செயலாளராகவும் ஜேட்லி உயர்ந்தார். அதன்பின் பாஜகவில் படிப்படியாக வளர்ச்சியை நோக்கிய முன்னேறிய ஜேட்லி 1991-ம் ஆண்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகினார்.

சட்டம் பயின்ற அருண் ஜேட்லி மிகச்சிறந்த வழக்கறிஞராக இருந்தார். கடந்த 1987-ம் ஆண்டில் இருந்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தால், கடந்த 1990-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ஜேட்லியை மூத்த வழக்கறிஞரக பதவி உயர்வு அளித்தது.

சொலிசிட்டர் ஜெனரல்

கடந்த 1989-ம் ஆண்டு வி.பி.சிங் அரசில் அருண் ஜேட்லி அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். அப்போது ராஜீவ்காந்தி சம்பந்தப்பட்ட போபர்ஸ் ஊழல் வழக்கின் ஆவணங்களை திறம்பட கையாண்டவர் ஜேட்லிதான். சரத் யாதவ், மாதவராவ் சிந்தியா, எல்.கே.அத்வானி ஆகியோர் சார்பாகவும் ஜேட்லி வாதிட்டுள்ளார். இதுதவிர பெப்சி நிறுவனம் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஜேட்லி ஆஜராகி வாதிட்டு வழக்கை வென்றுகொடுத்துள்ளார்.

1999 தேர்தல்

1999-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவின் தலைமை செய்தித்தொடர்பாளராக ஜேட்லி இருந்து திறமையாகச் செயல்பட்டார்.
1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் ஜேட்லிக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தனிஅமைச்சராகவும், முதன்முறையாக முதலீட்டு விலக்கல் அமைச்சகத்தை உருவாக்கி அதன் அமைச்சராகவும் ஜேட்லி நியமிக்கப்பட்டார்.

பாஜகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் ராம்ஜெத் மலானி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின், கேபினெட் அமைச்சராக உயர்ந்து சட்டம் மற்றும் நீதித்துறை, கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக ஜேட்லி பதவி வகித்தார்.
2004-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தவுடன் மீண்டும் கட்சிப்பணிக்கு திரும்பிய ஜேட்லி பாஜகவின் தேசிய பொதுச்செயலளாராகவும், தனது சட்டப் பணியையும் கவனித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்

கடந்த 2009-ம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி தேர்வு செய்யப்பட்டவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஜேட்லி வழக்கறிஞர் பணி செய்வதை நிறுத்திவிட்டார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜேட்லி அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு சிம்ம சொப்னமாக திகழ்ந்தார்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு ஊழல்கள், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா ஆகியவற்றின் போது ஜேட்லியின் செயல்பாடு முக்கியமானதாக இருந்தது.

மத்திய நிதியமைச்சர்

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு அமரிந்தர் சிங்கிடம் ஜேட்லி தோல்விஅடைந்தார். அதன்பின் குஜராத்தில் இருந்தும், உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது. அதுமுதல் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் நெருக்கமாக இருந்த மத்திய அமைச்சர்களில் முதன்மையாக இருந்தார் அருண் ஜேட்லி.

அதில் நிதி, கார்பரேட் விவகாரம், பாதுகாப்பு என முக்கியமான துறைகள் ஜேட்லிக்கு ஒதுக்கப்பட்டது. நிதியமைச்சராக முதலில் நியமிக்கப்பட்ட ஜேட்லி, மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கோவா அரசியலுக்கு திரும்பிய சிறிதுகாலம், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார். அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோது தனது காலத்தில் 4 பட்ஜெட்டை ஜேட்லி தாக்கல் செய்துள்ளார்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நிதியமைச்சராக ஜேட்லி இருந்தபோது பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊழலை ஒழிப்பது, கறுப்புபணத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவித்து வருமானவரி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நாட்டையே அதிரவைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். தீவிரவாதம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் பதவிக்காலத்தில்தான் எடுக்கப்பட்டது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகமாகின. இந்ததிட்டத்தில் ஏராளமான குளறுபடிகளும், குழப்பங்களும் நிலவியதால், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்கு நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆளானது.

சீர்திருத்தங்கள்

அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோதுதான் நாட்டின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமான ஜிஎஸ்டி வரியை கொண்டுவரப்பட்டது. இந்த வரியிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதிலும் தனது பேச்சுத் திறமையாலும், நிர்வாகத்திறமையாலும் ஜிஎஸ்டி வரியில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினார் ஜேட்லி.

உடல்நலக்குறைவு

கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருண் ஜேட்லி மே 14-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்தவந்த நிலையிலும் நிர்வாகப் பணியில் முன்புபோல் தீவிரமாக ஈடுபடவில்லை. இதனால், பிரதமர் மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்டைக் கூட ஜேட்லியால் தாக்கல் செய்ய முடியாமல் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜேட்லி 2-வது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் ஜேட்லி தெரிவித்தார்.

எய்ம்ஸ்

இதனிடையே அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் கடந்த 9-ம் தேதி இரவு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் உடல்நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாக எய்ம்ஸ் மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் இன்று இந்த உலகை விட்டு அருண் ஜேட்லி தனது 66 வயதில் பிரிந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஜேட்லின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை ஜம்முகாஷ்மீர் மாநில நிதியமைச்சர் கிரிதாரி லாக் தோக்ராவின் மகள் சங்கீதாவை ஜேட்லி திருமணம் செய்தார். ஜேட்லிக்கு ரோஹித் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உண்டு. இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

SCROLL FOR NEXT