காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி : கோப்புப்படம் 
இந்தியா

பொருளாதாரச் சரிவை மத்திய அரசுக்கு சரியாகக் கையாளத் தெரியவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,
நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்லும் நிலையில், அதுகுறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடியும், நிதியமைச்சரும் மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி தலைவராக இருக்கும் நிதிஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், " கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. ஒட்டுமொத்த நிதித்துறையும் இதுபோன்றதொரு சுழலில் சிக்கியதில்லை. அரசாங்கம் இந்த சூழலில் தனியார் துறையின் தயக்கங்களைக் களைய ஏதாவது உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பிரச்சினை நிதித்துறையில்தான் நிலவுகிறது என்பதை அரசாங்கம் சரியாகப் புரிந்திருக்கிறது என்றால் இதனை உடனே செய்ய வேண்டும். இப்போது நிலவும் பணப்புழக்க தேக்க நிலை கிட்டத்தட்ட நொடிந்த நிலையை நோக்கிச் செல்கிறது. அதனால் உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல், ஐபிசி ஆகியனவற்றிற்குப் பின்னர் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தமாக பொருளாதார நிலைமை மாறி ரொக்கப்பபணப்புழக்கம் மிக குறைந்துவிட்டது" எனத் தெரிவித்தார்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, நாட்டின் பொருளாதார சரிவு குறித்து பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மவுனம் காப்பது குறித்துகேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்றுவருவதாக நிதிஆயோக்கின் துணைத்தலைவர் கூறியுள்ளார். ஆனால், பிரதமரும், நிதியமைச்சரும் காதில் எதுவுமே விழாதபோல் இருக்கிறார்கள்.

ஆனால், நாட்டில் அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள்தான் நடக்கின்றன. நாட்டில் எப்போதுமில்லாத, அறிவிக்கப்படாத அவசரநிலை சூழல் நிலவுகிறது.

நாட்டின் சரியும் பொருளாதாரத்தை சரி செய்வதற்கும், அதை சமாளித்து இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கும் மத்திய அரசுக்கு தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் மோசமான நிலையை நோக்கி பொருளாதாரம் நகர்கிறது.

நாட்டின் பொருளதாரத்தின் நிலைமையை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்த நிதிஆயோக் துணைத் தலைவருக்கு எனது பாராட்டுக்கள். இப்போது நாட்டின் நிதிநிலை எப்போதுமில்லாத நெருக்கடியை சந்தித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதில் சின்ன திருத்தம் இருக்கிறது. நிதித்துறை மட்டும் நெருக்கடியைச் சந்திக்கவில்லை, இந்தியப் பொருளாதாரமே நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் முன்னெப்போதும் இல்லாத சூழலில் இருக்கிறது.கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத சூழலை சந்திக்கிறது

இந்த சூழலுக்கும் மறைந்த பிரதமர் நேருதான் காரணம் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நம்புவார்கள். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது என்று கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு கூறி வருகிறது.

ஆனால் நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வியப்படையவேண்டும். ஏனென்றால், 3 கோடிக்கும் மேலான மக்கள் வேலையிழக்கும் அபாயத்தை சந்தித்துள்ளார்கள். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கி இருக்கிறது

ஜவுளித்துறை கடந்தவாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான காலம். தேயிலைத் தொழிற்சாலையும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு மணிஷ் திவாரி தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT