இந்தியா

நரேந்திர மோடிக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு: தாயார் ஹீராபென், மனைவி யசோதா பென்னுக்கும் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

பிரதமராக பதவி ஏற்கவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடிக்கு மத்திய சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்.பி.ஜி.) பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரது தாயார் ஹீராபென், மனைவி யசோதா பென்னுக்கும் இப்படையின் பாதுகாப்பு வழங்கப்படும்.

தற்போது குஜராத்தின் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடிக்கு தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படையைச் சேர்ந்த 45 வீரர்கள், மோடிக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களுடன் குஜராத் போலீஸாரின் சிறப்பு பாதுகாப்பும் மோடிக்கு உள்ளது.

விரைவில் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு, எஸ்.பி.ஜி. பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்பிஜி, பிரதமரின் பாதுகாப்பிற்காக விசேஷமாக உருவாக்கப்பட்ட மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஆகும். பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் உறவினர்களுக்கு மட்டுமே சட்டப்படி இந்த சிறப்புப் படையின் பாதுகாப்பை அளிக்க முடியும்.

மோடி பிரதமராவது உறுதியாகிவிட்ட நிலையில், குஜராத் சென்ற இப்படையின் ஒரு குழுவினர், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து எஸ்.பி.ஜி.யின் இயக்குநர் ஜெனரல் கே.துர்கா பிரசாத் கூறுகையில், “புதிய பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது” என்றார்.

மோடியின் தாயார் ஹீராபென், அவரது மனைவி யசோதா பென் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. ஆனால், அவரின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இப்படையின் பாதுகாப்பை சட்டப்படி வழங்க முடியாது. எனவே, அவர்களுக்கு ‘இசட் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

யசோதாவுக்கு அறிவுரை

யசோதா பென், தற்போது குஜராத் மாநிலம், பனஸ்காந்தா மாவட்டத்தின் ராஜோசனா கிராமத்தில் குடியிருக்கிறார். அந்த கிராமத்தில் அவர் குடியிருப்பது பாதுகாப்பற்றது என்று கருதும் எஸ்.பி.ஜி. அதிகாரிகள், அவரை அகமதாபாதில் குடியேறும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

புது டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலை எண் 7-ல் அமைந்திருக்கும் பிரதமர் இல்லம் நிரந்தரமாக எஸ்.பி.ஜி.யின் கண்காணிப்பில் உள்ளது. தற்போது மோடிக்கு உள்ள ‘இசட் ப்ளஸ்’ படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி கருப்புநிற சீருடையில் வலம் வருகின்றனர். ஆனால், எஸ்.பி.ஜி. வீரர்கள் சீருடையின்றி ‘சபாரி’ உடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

மோடிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மத்திய உளவுத் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: “ஏற்கெனவே மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அவர்களின் தாக்குதல் முயற்சி பல முறை முறியடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின் இந்த அச்சுறுத்தல் அதிகமாகி உள்ளது. எனவே, அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT