இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் : கோப்புப்படம் 
இந்தியா

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக். ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபடுவதற்கும், அவரை முகாமில் கொடுமைப்படுத்தியற்கும் காரணமாக இருந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த அதிகாரி கொல்லப்பட்டதாக ராணுவவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ்மீது தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்று பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இமுகமது தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து திரும்பியது.

பாகிஸ்தான் வீரர் அகமது கான்


அப்போது, இந்திய விமானப்படை வீரர்களின் விமானம் வந்தபோது, அதை பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் இடைமறித்தது. இந்திய வீரர் அபிநந்தன் செலுத்திய மிக் ரக விமானம் பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியபின் பாரசூட் மூலம் பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் விழுந்தார்.

இந்திய வீரர் அபிநந்தனை அடையாளம் கண்டு அவரைப் பிடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவு சுபேதார் அகமது கான் முக்கியமானவர். இவர்தான் அபிநந்தனை பிடித்துச் சென்று முகாமில் ஒப்படைத்தவர். முகாமில் அபிநந்தனை டார்ச்சர் செய்தவர் அகமது கான் என்று கூறப்பட்டது.
அபிநந்தனை அழைத்துச் செல்லும் புகைப்படங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டபோது அவரின் அருகே நின்றிருந்தார் அகமது கான்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடமுயன்றனர். திறன்பெற்ற, தீவிரப் பயிற்சி எடுத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ வைக்க அகமதுகான் உதவியுள்ளார்.

அப்போது இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில், ராக்கெட் லாஞ்சர்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அப்போது இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் அகமது கான் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT