புதுடெல்லி
இந்திய விமானப்படைக்காக வாங்க இருக்கும் 36 ரஃபேல் அதிநவீன போர் விமானங்களில் முதல் விமானத்தை பெறுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மற்றும் விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா ஆகியோர் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கின்றனர்.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் போர்விமானம் அடுத்த மாதம் ஒப்படைப்படைக்கப்பட உள்ளது.
பிரான்ஸின் போர்டியக்ஸ் நகரில் ரஃபேல் விமானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையிலேயே வரும் செப்டம்பர் 20-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள், ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் டசலாட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்தியாவிடம் முதல் ரஃபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.
பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அந்நாட்டுடன் நட்புறவை வலுப்படுத்தும் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
முதல் ரஃபேல் போர் விமானத்தை பெறும்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் இந்திய விமானப்படையின் ஒருகுழு ஏற்கனவே பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
ரஃபேல் விமானத்தை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 24 விமானிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானம் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவுக்கு வழங்கப்படும் ரஃபேல் விமானத்தை இயக்குவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முதல்பிரிவு ரஃபேல் விமானங்கள் அம்பாலா விமானப்படைத் தளத்திலும், 2-வது பிரிவு விமானங்கள் மேற்குவங்கத்தில் உள்ள ஹஸிமரா விமானப்படைத் தளத்திலும் நிறுத்தப்பட உள்ளது.
இந்தியாவிடம் அளிக்கப்பட உள்ள ரஃபேல் போர் விமானம் பிரான்ஸ் ராணுவத்திடம் கூட இல்லாத அளவுக்கு நவீனமானதாகும். இஸ்ரேல் நாட்டின் ஹெல்மெட் டிஸ்ப்ளே, ரேடார் எச்சரிக்கை கருவிகள், குறைந்தஅலைவரிசையை முடக்கும் ஜாமர்கள், 10 மணிநேரம்வரை விமானிகளின் உரையாடலை பதிவு செய்யும்வசதி, கண்காணிப்பு, உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன.
பிடிஐ