என்.மகேஷ்குமார்
திருப்பதி
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என அத்தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய தெலுங்கு தேசம் அரசால் குண்டூர்-கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களுக்கு இடையே 33 ஆயிரம் ஏக்கரில் அமராவதி நகரம் உருவாக்கப்பட்டு தலைநகராக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமராவதி அல்லாமல் வேறு பகுதியை ஆந்திராவின் தலைநகராக மாற்ற தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆந்திர மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. சத்திய நாராயணா நேற்று முன்தினம் கூறியதாவது:
அமராவதியில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அமராவதி
யில் உள்ள பல கிராமங்கள் மூழ்கின. மேலும், அமராவதியை தலைநகரத்துக்கு பொருந்தாத பகுதி என ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆந்திரத்தின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ராயலசீமா பகுதியில் உள்ள சித்தூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பகுதி தலைநகராக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், “அனந்தபூர், கர்னூல், கடப்பா ஆகிய பகுதிகளில் போதிய தண்ணீர் வசதி இல்லை. எனவே, அந்தப் பகுதிகளை தலைநகராக்குவது சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால், திருப்பதியை தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்றார்.