போபால்
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் பாபுலால் கவுர். 193-0-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிறந்த கவுர் பின்னர் மத்திய பிரதேச மாநிலத்துக்கு குடி பெயர்ந்தார். அம்மாநிலத்தில் பாஜக மூத்த தலைவராகவும், தொழிற்சங்க தலைவராகவும் நீண்டகாலம் பணியாற்றினார்.
கோவிந்தபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 10 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனார். அமைச்சர் மற்றும் எம்.பி பதவியையும் வகித்த அவர் ம.பி. மாநில முதல்வராக கடந்த 2004-ம் - 2005-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
அண்மைக்காலமாக உடல்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்து அவர் இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் ‘‘பாபுலால் கவுர் பல ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்தவர். ஜனசங்கம் கட்சியில் இருந்தபோது, கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றியவர்.
மத்திய பிரதேச அமைச்சராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர். அவரது மறைவு வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.