காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

சிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க முதுகெலும்பில்லாத ஊடகங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் சில முதுகெலும்பில்லாத ஊடகங்களைப் பயன்படுத்துகிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் எனும் விவரம் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தநிலையில் இன்னும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மேலும், ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லா வகையில் அமலாக்கப்பிரிவும், சிபிஐ அமைப்பும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாகச் சாடி பதிவிட்டுள்ளார். அதில் " பிரதமர் மோடியின் அரசு அமலாக்கப்பிரிவு, சிபிஐ மற்றும் சில முதுகெலும்பில்லாத ஊடகங்களைப் பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றன. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ

SCROLL FOR NEXT