இந்தியா

சமூக வலைதளப் பயனாளர் சுய விவரத்தில் ஆதார் எண் இணைப்பு விவகாரம்: 'டார்க் வெப்’ அபாயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

செய்திப்பிரிவு

ஆன்லைன் தனியுரிமைக் கொள்கை மற்றும் இணையத்தை தவறாகப் பயன்படுத்தி வதந்திகளையும் குற்றங்களையும் செய்வோரை அரசு கண்டுபிடிப்பது ஆகிய இரண்டுக்குமிடையே சமநிலை இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களின் சுய விவரத்தில், ''ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தினார். இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ‘டார்க் வெப்’ பற்றிய அபாயங்கள் குறித்த கவலைகளை வெளியிட்டனர்.

டார்க்நெட் அல்லது டார்க்வெப் என்பதில் பயனாளர்களின் இருப்பிடம், அடையாளங்களை என்கிரிப்ஷன் சிஸ்டம் மூலம் தடம் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு அதை எப்படி ஆக்சஸ் செய்வது என்பது தெரியாது. ஆனால் டார்க் வெப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இது சர்வீஸ் வெப்களில் நடப்பதை விட மோசம்” என்று நீதிபதி குப்தா தெரிவித்தார்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளப் பயனாளர்கள் தங்கள் சுயவிவரத்தில் தங்கள் ஆதார் எண்ணையும் சேர்ப்பதினால் சட்ட அமலாக்கத் துறை குற்றங்களைக் கண்டுபிடிக்க வழிவகை செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

இதன் மூலம் பொய்ச்செய்திகள், அவதூறுக் கட்டுரைகள், ஆபாச விவகாரங்கள், தேச விரோத மற்றும் பயங்கரவாத உள்ளடக்கங்களைக் கண்காணிக்க ஆதார் எண் தேவை என்று கூறிய அட்டர்னி ஜெனரல், ப்ளூ வேல் விளையாட்டு எப்படி நிறைய பெற்றோர்களை அச்சமூட்டியது, எத்தனை இளம் உயிர்களைப் பலிவாங்கியது என்று சுட்டிக்காட்டினார்.

இத்தகைய உள்ளடக்கங்களின் ‘மூலம்’ யார், என்னவென்பதை அரசினால் தடம் காண முடியவில்லை. குற்றங்கள் நடப்பதை நாம் அனுமதிக்க முடியாது என்று கேகே.வேணுகோபால் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூத்த வழக்கறிஞர்களான் முகுல் ரோஹத்கி மற்றும் கபில் சிபல் ஆகியோர் இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி தீர்ப்பு பெறவே உச்ச நீதிமன்றத்தை தாங்கள் நாடியுள்ளதாகவும் கே.கே.வேணுகோபால் தேவையில்லாமல் வழக்கின் தகுதி குறித்து இங்கு பேசுகிறார். இது தேவையற்றது, வழக்குகளை மாற்றுவது பற்றி மட்டும் அவர் பேசினால் போதுமானது. நாட்டின் உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றம்தான் இது குறித்து தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர உயர் நீதிமன்றங்களல்ல. ஏனெனில் உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் நாடு ஒட்டுமொத்தத்திற்கும் பொருந்துவது.

உயர் நீதிமன்றங்கள் பல வேறுபட்ட கருத்துகளை, தீர்ப்புகளை முடிவுகளை வெளியிடலாம். ஆனால்ம் உச்ச நீதிமன்றம்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று ரோஹத்கி தெரிவித்தார்.

“சமூக வலைதளங்களை நாங்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதை இவர்கள் கூற முடியாது. வாட்ஸ் அப்பில் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் கொண்டுள்ளோம், நாங்களே உள்ளடக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியாது. நாங்கள் எப்படி ஆதார் எண் என்ன என்பதை தெரிவிக்க முடியும். பயனாளர்களின் தனியுரிமையையும் நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது” என்று சமூக வலைதளங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய நீதிமன்றங்களின் இது குறித்த முடிவுகள் உலக அளவில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும் என்றார் கபில் சிபல். ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பயனாளர் தனியுரிமை, அந்தரங்கம் ஆகியவை அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணையை செப்.13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் உயர் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்காது என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT