இந்தியா

‘75 வயதில் பதவி வேண்டாம்’- பாஜக கொள்கையை ஏற்று ராஜினாமா செய்த உ.பி. அமைச்சர்

செய்திப்பிரிவு

லக்னோ

உத்தரப் பிரதேச மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால் தனக்கு 75 வயது பூர்த்தியானதால் கட்சி கொள்கைப்படி பதவி விலகுவதாக அறிவித்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால். பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான அவர் பரேலி தொகுதியில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2003 முதல் 2007ம்- ஆண்டு வரை அவர் துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தனது 75-வது பிறந்த நாளை ராஜேஷ் அகர்வால் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். இந்நிலையில் 75 வயதுக்குப் பிறகு யாரும் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசுப் பொறுப்புகளை வகிக்க வேண்டாம் என பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் 75 வயதுக்குப் பிறகு பதவி விலகியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் இதே காரணத்தைக் காட்டி போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, கட்சி முடிவை ஏற்று அமைச்சர் ராஜேஷ் அகர்வாலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தனது ராஜினாமா கடிதத்தை ராஜேஷ் அகர்வால் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கட்சியின் கொள்கைப்படி எனக்கு 75 வயது ஆகி விட்டதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதனை ஏற்பது கட்சியின் முடிவு. அதுபோலவே எனக்கு வேறு பொறுப்புகள் வழங்குவதும் கட்சியின் முடிவு. கட்சி எனக்கு என்ன கட்டளை இடுகிறதோ, அதனைச் செய்வேன்’’ என ராஜேஷ் அகர்வால் கூறினார்.

SCROLL FOR NEXT