பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் பலி, 4 பேர் காயம் 

செய்திப்பிரிவு

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த 370-வது பிரிவில் திருத்தம் கொண்டு வந்தது. மேலும் மாநிலத்தை லடாக், மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பஸ், ரயில் போக்குவரத்து ரத்து, வர்த்தக உறவு ரத்து என எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம் எல்லைப் பகுதியில் பதற்றத்துடன் வைக்கும் வகையில் படைவீரர்களையும் பாகிஸ்தான் குவித்து வருகிறது.

பாகிஸ்தானின் நடவடிக்கைக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்திய ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியான கிருஷ்ணா காட் பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இருதரப்பு வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

SCROLL FOR NEXT