இந்தியா

தாம்பரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி: கிணற்றை சுத்தப்படுத்த முயன்றபோது சோகம்

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே கிணற்றுக்குள் இறங்கிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சந்தோஷ்புரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜான். ரிசர்வ் வங்கியில் பணியாற்றுகிறார். இவரது வீட்டில் 30 அடி ஆழ கிணறு உள்ளது. அதில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் குப்பைகள் நிறைந்து கிடந்தன. இதனால் கிணற்றை சுத்தப்படுத்த நினைத்த ஜான், அதுபற்றி அதே பகுதியைச் சேர்ந்த சின்னமுத்து (45) என்பவரிடம் கூறினார். வியாழக்கிழமை காலை சின்னமுத்துவும் கவுரிவாக்கத்தைச் சேர்ந்த காளி (57) என்பவரும் சேர்ந்து கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றின் மூடியை திறந்து முதலில் சின்னமுத்து இறங்கினார். அப்போது விஷவாயு தாக்கியதால் அவர் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்து பதற்றம் அடைந்த காளி, சின்னமுத்துவை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கியது.

இருவரும் கிணற்றுக்குள் மயங்கி விழுந்ததை பார்த்துக் கொண்டிருந்த ஜான், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் மயங்கிக் கிடந்த இரண்டு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT