இந்தியா

‘அயோத்தியில் கோயிலை இடித்தே மசூதி கட்டப்பட்டது’ - உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா தரப்பு வாதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்து கோயில் இடிக்கப்பட்டு அதன் மீதே மசூதி கட்டப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ராம் லல்லா சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நிர்மோகி அகாரா சார்பில் முதல் 2 நாட்கள் வாதங்கள் வைக்கப்பட்டன. ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ராம் லல்லா விராஜ்மான் சார்பாக வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில் ‘‘அயோத்தி கடவுள் ராமரின் ஜென்மபூமி, பிறந்த இடம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது பகுத்தறிவுகுட்பட்டதா என நீதிமன்றம் ஆய்வு செய்யக்கூடாது’’ எனக் கூறினார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு 8-வது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராம் லல்லா சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் மீண்டும் இன்று ஆஜராகி வாதாடினார்.

அப்போது வைத்தியநாதன் கூறுகையில், ''சர்ச்சைக்குரிய பகுதியில் இந்து கோயில் இருந்ததற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் முதலை, ஆமை உருவங்கள் பொறித்த சிற்பங்கள் கிடைத்துள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறை கூறியுள்ளது. மற்ற சான்றுகளும் அங்கு இந்து கோயில் இருந்ததை உறுதி செய்கின்றன. சர்ச்சைக்குரிய பகுதியில் இந்து கோயில் இடிக்கப்பட்டு அதன் மீதே மசூதி கட்டப்பட்டுள்ளது'' என்றார்.

SCROLL FOR NEXT