இந்தியா

சந்திரயான் -2: இன்று முக்கிய மைல்கல்; இலக்கை நெருங்குகிறோம்- இஸ்ரோ தலைவர் பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்தது மிகப்பெரிய சாதனை நிகழ்வு, இதன் மூலம் இலக்கை நாம் நெருங்கி வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
அதன் பிறகு இந்த விண்கலம் 5 மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் -2 விண்கலம் சென்றடைந்தது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்று ஆகஸ்ட் 14-ம் நாள் 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. இது மிக முக்கியமான பயணமாகும்.

இதைத்தொடர்ந்து இன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான் விண்கலம் சென்றடைந்தது. சந்திரயான்- 2 திட்டத்தில் இது மிக முக்கியமான சாதனையாகும். இதன் மூலம் நாம் இலக்கை நெருங்குகிறோம். நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும்.

முன்னதாக 2-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்து பிரிந்து சந்திரயான் 2 விண்கலம் நிலவை நோக்கி நகரும். இதன் பிறகு செப்டம்பர் 4-ம் தேதி நிலவின் மேல் பகுதியை சென்றடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT