புதுடெல்லி, பிடிஐ
புதுடெல்லி துக்ளக்பாத் வனப்பகுதியில் இருக்கும் குரு ரவிதாஸ் கோயில் குறித்த தங்கள் உத்தரவுகளுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் திங்களன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரவிதாஸ் கோயில் இடிப்பு தொடர்பாக எழும் போராட்டங்களினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டியது டெல்லி, ஹரியாணா,பஞ்சாப் மாநில அரசுகளின் கடைமையாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று ஹரியாணா, பஞ்சாப், டெல்லி அரசுகளுக்கு இதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
“அனைத்தும் அரசியலாக இருக்க முடியாது, எங்கள் உத்தரவுகளுக்கு இந்தப் பூமியில் யாரும் அரசியல் சாயம் பூச முடியாது” என்று நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி டெல்லி மேம்பாட்டு ஆணையம் ரவிதாஸ் கோயிலை இடித்தது. அதாவது, குரு ரவிதாஸ் ஜெயந்தி சமரோ சமிதி நீதிமன்றம் முன்பு வனப்பகுதியை விட்டு காலி செய்ய வெண்டும் என்று உத்தரவிட்டிருந்ததை மீறியுள்ளது என்று ஆகஸ்ட் 9ம் தேதி கூறியது.
500 ஆண்டுகால கோயிலை இடித்ததால் பஞ்சாப் மற்றும் டெல்லியில் சில அரசியல் கட்சிகள் சார்பிலும் தலித் சமூகத்தினர் சார்பிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது தொடர்பாக ஆகஸ்ட் 13ம் தேதியன்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கோர்ட்டில் கூறும்போது 18 அமைப்புகள் இடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றன என்றார்.
பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் இதற்கு பின்னால் குறிப்பிட்ட நபர் செயல்படுகிறார் என்று கூற முடியாது என்றும் கேகே வேணுகோபால் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் அமர்வு பதிலளிக்கையில், இந்த விவகாரம் முடிந்து விட்டால் சிக்கல் எதுவும் இல்லை, ஆனால் எதுவும் பிரச்சினகள் எழுந்தால் கோர்ட் விசாரணையை தொடங்கும் என்றார்.
பிறகு அட்டர்னி ஜெனரல் கேகே. வேணுகோபால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றார், இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “அரசியல் ரீதியாகவோ வேறு எந்த விதத்திலுமோ சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்படாமல் இருப்பதை பஞ்சாப், ஹரியாணா, டெல்லி அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினர்.
இந்த விவகாரத்தின் விசாரணையை கோர்ட் 3 வாரங்களுக்குத் தள்ளி வைத்தது.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ரவிதாஸ் சமூகத்தினரின் குழு ஒன்றை தன் தலைமையில் வழிநடத்தி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இது தொடர்பாக தலையீடு கோரவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதாவது கோயிலை மீண்டும் எழுப்ப நிலம் ஒதுக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கோர்ட் இந்த விவகாரம் குறித்து எச்சரித்த போது, “ஒரு வார்த்தையும் பேச வேண்டாம், விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம், நீங்கள் அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டி வரும். என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பார்ப்போம்” என்றது.