பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி : கோப்புப்படம் 
இந்தியா

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்: மாயாவதி

செய்திப்பிரிவு

லக்னோ,

சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையைக் கைவிடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், " இட ஒதுக்கீடு குறித்து ஆதரவாக கருத்து தெரிவிப்போர், எதிராக கருத்து தெரிவிப்போர் என இரு வகை நிலைப்பாட்டில் இருப்பவர்களும் பிறர் நலனைக் கருத்தில்கொண்டு திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும்" என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சுக்கு பதில் அளித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "ஒத்திசைவான சூழலில் எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசிக்கு அளித்துள்ள இட ஒதுக்கீடு குறித்து ஆதரவான நிலைப்பாடு உள்ளோரும், எதிரான நிலையில் இருப்போரும் திறந்த மனதுடன் விவாதம் நடத்தலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியுள்ளார். இதுபோன்ற விவாதம் ஆபத்தான சூழலை உருவாக்கும், இந்த விவாதம் தேவையற்றது.

இட ஒதுக்கீடு என்பது மனிதநேயத்துடன் வழங்கப்படுவது, அரசியலமைப்புச்சட்டம் வழங்கியது. அதில் இடையூறு செய்வது என்பது, அநீதியானது, முறையற்றது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் அமைப்பு கைவிடுவதுதான் சிறந்தது" என மாயாவதி தெரிவித்துள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT