புதுடெல்லி,
வாக்குவங்கி அரசியல், திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவைதான் முத்தலாக் தொடர்ந்து நீடிக்க காரணமாகஇருந்தது. முத்தலாக் தடைச் சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தபோது அதை எதிர்த்த காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
புதுடெல்லியில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின் சார்பில் இன்று கருத்தரங்கம் நடந்தது. 'முத்தலாக்கை ஒழித்தல்; வரலாற்று தவறை திருத்துதல்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
முத்தலாக் என்பது தவறான பழக்கம். யாரிடம் கேட்டாலும் இது தவறு என்றுதான் சொல்வார்கள், அதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால்,இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த போது சில கட்சிகள் எதிர்த்தன. முத்தலாக் தவறான பழக்கம்தான் அவர்களுக்கும் தெரியும், அதை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது அவசியம் என்பதையும் உணர்வார்கள். ஆனால் அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் இல்லை.
சிலர் இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்று பாஜக மீது குற்றம்சாட்டுகிறார்கள். முத்தலாக் தடை மசோதா கொண்டுவந்ததன் நோக்கம் முஸ்லிம் மக்களின் நலனுக்காதத்தான். வேறு யாருக்காகவும் அல்ல. கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தவர்கள் இதில் பயன் அடையப்போவதில்லை, ஏனென்றால், இந்த பழக்கத்தால் அவர்கள் பாதிக்கப்படவும் இல்லை. கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு காலம்காலமாக உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. நாங்கள் முத்தலாக் தடைச் சட்டத்தில் கிரிமினல் குற்றம் என்ற பிரிவைச் சேர்த்தன் நோக்கம் பாலினச் சமத்துவத்துக்காதத்தான்.
வாக்குவங்கி அரசியல், திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவைதான் முத்தலாக் தொடர்ந்து நீடிக்க காரணமாக இருந்தது. முத்தலாக் தடைச் சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தபோது அதை எதிர்த்த காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும்
ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ராஜிவ்காந்தி அரசு சட்டம் கொண்டுவர முடிவு செய்தது இது நாடாளுமன்றத்தின் கறுப்பு நாளாகும்.
முத்தலாக் வழக்கம் மட்டுமல்ல, எந்த கொடுமையான வழக்கம் ஒழிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகள் வரவேற்க வேண்டும். ஆனால், இங்கு முத்தலாக் தடைச் சட்டத்துக்கு சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. நாட்டில் வளர்ச்சியையும், சமூக ஒற்றுமையும் அடைவதற்கு தடையாக இருப்பது திருப்திபடுத்தும் அரசியல்தான்.
சமூகத்தை மேம்படுத்துவதுதான் நோக்கமாக இருக்கும்போது, கடினமாக உழைக்க வேண்டும், திட்டமிட வேண்டும். கடந்த 2014-ம்ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோதே, திருப்திபடுத்தும் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்
பிடிஐ