இந்தியா

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு

தேவேஷ் கே.பாண்டே

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் அதிகாரம், அரசு அலுவலகங்களில் உள்ள பாலியல் புகார்களை பரிசீலிக்கும் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (பயிற்சி) துறை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பாலியல் வன்முறைகள் குறித்த விசாரணை, புகார் அளித்த பெண்களை பணியிடம் மாற்றம் செய்வது, மூன்று மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது ஆகியன குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் இத்துறை வகுத்துள்ளது. மேலும், இந்த விடுப்பானது பாதிக்கப்பட்ட நபரின் விடுப்புக் கணக்கில் கழிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறையின்படி பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் புகாரை பதிவு செய்ய வேண்டும். இருப்பினும், 3 மாதங்களுக்குப் பின்னர் புகார் அளிக்கப்பட்டாலும்கூட தாமதத்துக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால் புகார் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதத்தில் விசாரணை

பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டவுடன், விசாரணைக் குழுவானது ஆதாரங்களை சேகரிக்கும், சாட்சியங்களிடம் வாக்குமூலங்களை பெறும். தேவைப்பட்டால் குற்றப்பத்திரிகை வழங்கி, குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் விளக்கம் கேட்கும். மூன்று மாதங்களுக்குள் அனைத்து விசாரணையும் முழுமையாக முடிக்கப்படும்.

சாட்சியங்களிடம் விசாரணை, மறு விசாரணை, குறுக்கு விசாரணை செய்யவும் இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணே பிரதான சாட்சியாக ஆஜரானால் அவரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது.

விசாரணை முடிவில் விசாரணைக் குழு செய்யும் பரிந்துரைகள் ஊடகங்களுக்கோ, பொது வெளியிலோ தெரிவிக்கப்படக் கூடாது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்பட்டதை அவரது பெயரை வெளியிடாமல் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT