மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர் குடும்பத்துக்கு அவரது கிராமத்து இளைஞர்கள் கட்டித் தந்த வீடு. 
இந்தியா

26 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தபோது உயிரிழந்த பிஎஸ்எப் வீரர் குடும்பத்துக்கு வீடு கட்டித் தந்த இளைஞர்கள்

செய்திப்பிரிவு

இந்தூர்

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் 26 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அவரது குடும்பத் துக்கு அவருடைய கிராமத்து இளைஞர்கள் புதிய வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இருந்து 40 கி.மீ. தொலை வில் உள்ள பீர் பிப்பாலியா கிராமத்தை சேர்ந்தவர் மோகன்லால் சுனேர். எல்லைப் பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) பணியாற்றி வந்த இவர், கடந்த 1992, டிசம்பரில் திரிபுராவில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இறந்தார்.

சுனேர் இறக்கும்போது அவருக்கு 3 வயதில் மகன் இருந்தான். மேலும் அவரது மனைவி ராஜூ பாய் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன் இறந்ததை தொடர்ந்து ராஜூ பாய் கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

இந்நிலையில் ராஜூ பாய்க்கு உதவுவதற்காக அவரது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த ரக் ஷா பந்தன் நாளில் நிதி வசூலிக்கத் தொடங்கினர். இதில் அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ராஜூ பாய் தனது கூரை வீட்டில் இருந்து புதிய வீட்டில் குடிபுகுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளைஞர்கள் தங்கள் உள்ளங்கைகளை தரையில் வைத்திருக்க, அவற்றின் மீது நடந்து ராஜூ பாய் புதிய வீட்டுக்குள் செல்கிறார். பின்னர் அனைவருக்கும் ராக்கி கட்டுகிறார்.

தியாகியின் குடும்பத்துக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக முதல்வர் கமல்நாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதனிடையே சுனேர் ராஜூ பாயின் இளைய மகன் லோகேஷ், பிஎஸ்எப்-ல் இணைந்துள்ளார். தற்போது அவர் பயிற்சியில் உள்ளார்.

SCROLL FOR NEXT