பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக மோடி நேற்று ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முகர்ஜியின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். நாட்டின் முன்னேற்றத்துக்காக விலைமதிக்க முடியாத பங்களிப்பை வழங்கிய சிறந்த தலைவரை இந்த நாளில் நினைவுகூர்வோம். இளைஞர் களுக்கு கல்வியறிவு புகட்ட வேண்டும் என்று அவர் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார். இதன் மூலம் அவர் சிறந்த அரசியல் மேதையாக விளங்கினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகர்ஜி யின் உருவப்படத்துக்கு கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பிற மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர். கடந்த 1901-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி பிறந்த முகர்ஜி, 1951-ம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தை நிறுவினார். பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி யாக அது உருவெடுத்தது.