சண்டிகர்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்ட வரலாற்று சாதனையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு 72 நாட்களுக்குள் செய்துள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் இதனை 72 ஆண்டுகளாக செய்யவில்லை எனவும் அவர் சாடினார்.
ஹரியாணா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அம்மாநிலத்தின் ஜிண்ட் நகரில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் முற்றிலுமாக நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைந்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெறும்.
2-ம் முறை பதவியேற்ற 75 நாட்களுக்குள் இந்த சாதனையை பிரதமர் மோடி அரசு செய்துள்ளது. ஆனால் 72- ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் இதனை செய்யவில்லை.
நமது ராணுவத்தின் மூன்று பிரிவுகளையும் இணைக்கும் விதத்தில் முப்படைக்கும் ஒரே தளபதி நியமிக்கப்பட வேண்டும் என கார்கில் போருக்கு பிறகு அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அமித் ஷா பேசினார். பொதுக்கூட்டத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.