இந்தியா

சர்ச்சைக்குரிய விளம்பர போஸ்டர்: சிக்கலில் பாஜக தலைவர்

செய்திப்பிரிவு

பாஜக-விலிருந்து நீக்கப்பட்ட, உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் சுதந்திரத் தினத்தன்று பாஜக தலைவர் ஒருவர் வெளியிட்ட போஸ்டரில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோருடன் இடம்பெற்றுள்ளார்.

இந்த விளம்பர போஸ்டர் உள்ளூர் முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியானது. உங்கு நகர் பஞ்சாயத்து தலைவர் அனுஜ் குமார் திக்‌ஷித் என்பவர் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது மனைவி சங்கீதா சிங் செங்கார் ஆகியோரது படத்தை இந்த விளம்பர போஸ்டரில் பயன்படுத்தியுள்ளார்.

இந்த விளம்பர போஸ்டரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரதேவ் சிங், உ.பி. சட்டப்பேரவை தலைவர் ஹிருதய நரைன் திக்‌ஷித் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏன் குல்திப் சிங் செங்கார் படம் இடம்பெற்றது, அவர்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராயிற்றே என்று செய்தியாளர்கள் அனுஜ் குமார் திக்‌ஷித்திடம் கேட்ட போது, “அவர் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. அதனால் இதில் இடம்பெற்றுள்ளார்” என்றார்.

ஆனால் பாஜக இந்தச் சர்ச்சையிலிருந்து விலகியுள்ளது.

ஆனால் கட்சித் தலைவர் ஷலாப்மனி திரிபாதி கூறும்போது, “குல்திப் சிங் செங்காரின் படத்தை அதில் போட்டது ஒருவரது சொந்தத் தெரிவு இதற்கு கட்சியோ, மாநில அரசோ பொறுப்பல்ல. குல்திப் சிங் செங்காரைப் பொறுத்தவரை கட்சி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்துவிட்டது. செங்காரிடம் எங்களுக்கு எந்தவித பரிவும் இல்லை” என்று பிடிஐயிடம் லக்னோவில் தெரிவித்தார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT