முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலைக்கு காத்திருக்கும் ஏழு பேர் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுவித்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார், “ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சார்பில் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை மத்திய அரசுக்கு உண்டு” என்று வாதிட்டார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பயன்படுத்தி, கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க சட்டத்தை வளைக்க முயற்சிக்கும்போது, பாதிக்கப்பட்டோர் சார்பில் குரல் கொடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு” என்று தெரிவித்தனர். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் 23 ஆண்டுகளாக சிறையில் தவித்து வருவதாக அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறினர்.
ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொண்ட நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், அனில் தவே, ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நாளை பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
ராஜீவ் கொலை வழக்கு போன்றே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலைக்காக காத்திருக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த கைதிகள் குறித்த வழக்கும் நாளை விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.