ஒடிஷா மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இறந்த நபர் பெயரில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சிங்கிரி கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த பங்கேஸ்வர் கிராமத்தின் உபேந்திரநாத் பெஹேரா 30 நாட்கள் பணியாற்றியதற்கான சம்பளத் தொகை ரூ.3000 அவரது கணக்கில் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் பெஹேரா 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதியே இறந்து போனதாக தெரியவந்துள்ளது.
பெஹேரா மட்டுமல்ல வேறு சில இறந்த நபர்களும் சம்பளம் பெற்றதாக தெரியவந்துள்ளது. இதேபோல், இறந்தவர்கள் பலரின் பெயரும் மஸ்டர் ரோலில் உள்ளது, அவர்கள் பெயரில் சம்பளம் சென்று கொண்டிருக்கிறது என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இறந்து போன பலர் பெயர்களில் சம்பளக் கணக்குக் காட்டப்படுவதாக புகார் வந்துள்ளன. தற்போது இதனை விசாரித்து வருகிறோம். நிர்வாகத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று கேந்திரபாரா மாவட்ட ஆட்சியர் தேவ்ராஜ் சேனாபதி தெரிவித்தார்.
இது குறித்து மனித உரிமை ஆர்வலர் கயாதர் தால் கூறும்போது, “இறந்தவர்கள் பெயரில் சம்பளம் மட்டுமல்ல, போலி நபர்கள், போலி மஸ்டர் ரோல்கள் என்று பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முறைகேடாக இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்தோரிடமிருந்து அவர்கள் பெற்ற தொகை பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சேனாபதி உறுதியளித்தார்.