இந்தியா

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் காஷ்மீர் மக்களின் அடையாளம் அழியாது: சுதந்திர தின விழாவில் ஆளுநர் சத்யபால் மாலிக் உறுதி

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்

“சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் மக்களின் அடையாளம் அழியாது” என அதன் ஆளுநர் சத்யபால் மாலிக் உறுதிபடத் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி நகரில் சத்யபால் மாலிக் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், துணை ராணுவப் படையினர், போலீஸாரின் அணிவகுப்பு மரியா தையை அவர் ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சுதந்திர தின நிகழ்ச்சியை பார்வையிட வந்த பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்தை பயன் படுத்தி, காஷ்மீரை சில அரசியல் வாதிகளும், பிரிவினைவாதிகளும் பல ஆண்டுகளாக சுரண்டி வந்தனர்.

மக்களின் வளர்ச்சியை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மாறாக, தங்களின் குடும்ப மேம்பாட்டில் மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்தி வந்தனர்.

இந்தியாவின் ஏனைய பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, காஷ்மீர் மட்டும் அதள பாதாளத்தில் இருந்தது. வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற சிந்தனை களில் இருந்து மக்களை திசைதிருப்பி, அரசுக்கு எதிரான போராட்டங்களில் அவர்களை சில அரசியல்வாதிகள் இறங்க வைத்தனர்.

இதன் விளைவாக, பெரும் பாலான காஷ்மீர் மக்களுக்கு அடிப் படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத சூழல் நிலவியது.

ஆனால், தற்போது அந்த இருண்ட காலம் மறைந்து, காஷ்மீருக்கு புதிய விடியல் ஏற்பட் டிருக்கிறது. இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல காஷ்மீரும் வளர்ச்சியின் பாதையில் செல்லும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மக்களுக்கு சேவைபுரியும் சிறந்த நிர்வாகங்கள் அமையப் பெறும்.

இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்படும் என விஷமிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனை மக்கள் நம்ப வேண்டாம். அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீர் மக்களின் எந்த அடையாளமும் அழியாது. மாறாக, அவை நிலைத்து நிற்கும் சூழல் ஏற்படும். காஷ்மீரி, டோங்ரி, கோஜ்ரி, பஹாரி, பால்டி, ஷீனா உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லப்படும். காஷ்மீர் பண்பாடும், கலாச்சாரமும் உலகம் முழுவதும் புகழ்பெறும். இவ்வாறு சத்யபால் மாலிக் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். - பிடிஐ

SCROLL FOR NEXT