இந்தியா

ஸ்ரவண மாதத்தில் உ.பி.வாசிகளிடம் காசு பறிக்க துன்புறுத்தப்பட்ட 111 பாம்புகள் ஆக்ராவில் மீட்பு 

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

வடமாநில இந்துக்களின் வருடப்படி ஸ்ரவண மாதத்தில் காசு பறிப்பதற்காகத் துன்புறுத்தப்பட்ட 111 பாம்புகள் இந்த வருடம் ஆக்ரா, மதுராவில் மீட்கப்பட்டுள்ளன. வனவிலங்குகள் சட்டப்படி இவற்றைக் காடுகளில் இருந்து பிடித்து வேடிக்கை காட்டுவது குற்றம் ஆகும்.

இதைக் கழுத்தில் சுத்தியபடி இருக்கும் இந்துக்களின் கடவுளான சிவனுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. இதனால், சிவனுக்கான மாதமான ஸ்ரவண மாதத்தில் பாம்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், உ.பி.யின் சிவன் கோயில்கள் முன்பாக பாம்புகளைப் பிடித்து வந்து பாம்பாட்டிகள் வேடிக்கை காட்டி காசு கேட்பது உண்டு. பொதுமக்களும் பாம்புகளைப் பார்த்து பக்தியாக மனம் உருகி அதிக தொகையைக் கொடுத்து விடுகிறார்கள்.

இதற்காகப் பாம்புகளின் விஷம் எடுக்கப்பட்டு விற்கப்படுவதுடன், அவற்றை வேடிக்கை காட்ட துன்புறுத்தலும் நடைபெறுகிறது. இதைத் தடுத்து பாம்புகளைக் காக்க வேண்டி உ.பி. மாநில அரசின் வனத்துறையினர் ஒவ்வொரு வருடம் ஸ்ரவண மாதங்களில் சிவன் கோயில்கள் முன்பாக சோதனை நடத்துவது வழக்கம்.

சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான வைல்டு லைஃப் எஸ்ஓஎஸ் உறுப்பினர்கள் இதற்குத் துணை புரிந்தனர். இந்த சோதனையில் நேற்று ஒரு நாள் மட்டும் ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சிவன் கோயில்கள் அருகில் 34 பாம்புகள் மீட்கப்பட்டன. இவற்றில் 30 நாகப்பாம்புகளும், நான்கு எலிப்பாம்புகளும் இருந்தன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் வைல்டு லைஃப் எஸ்ஓஎஸ் இயக்குநரான எம்.வி.பைஜு ராஜ் கூறும்போது, ''பாம்பாட்டிகள் மகுடியை ஊதக் கற்றுக்கொண்டு, பாம்புகள் அதற்கேற்றவாறு படம் எடுத்து ஆடுவதாக பொய் வித்தை காட்டுகின்றனர். ஏனெனில், காதுகளே இல்லாத பாம்புகளால் அந்த இசையைக் கேட்க முடியாது. மாறாக அது மகுடியால் தாக்கப்பட்டு விடுவோமோ என அஞ்சி அசைவதே ஆடுவதாகக் கருதப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் வைல்டு லைஃப் எஸ்ஒஎஸ் இணை நிறுவனரும் மூத்த நிர்வாகியுமான கார்த்திக் சத்யநாராயணன் கூறும்போது, ''பாம்புகளை வைத்து உ.பி.யின் மேற்குப்பகுதியில் ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. எனவே, ஸ்ரவண மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பாம்புகளுக்கான புனிதநாள் என நம்ப வைத்து ஏமாற்றுவது வழக்கமாகி விட்டது. இதனால் ஸ்ரவண மாதத்தில் ஏராளமான பாம்புகள் மீட்கப்படுவதும் வழக்கமாகி விட்டது'' எனத் தெரிவித்தார்.

பாம்புகளைப் பிடிப்பதும், அவற்றை வைத்து வேடிக்கை காட்டுவதும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி குற்றமாகும். இதை படிப்படியாகப் புரிந்துகொண்டு பாம்புகளை வைத்து பிழைத்து வந்த பாம்பாட்டிகள் மறுவாழ்வு தேடிச் சென்று விட்டனர்.

ஆக்ரா, மதுராவில் பாம்புகளுடன் பிடிபட்ட காவி உடை அணிந்த போலி பாம்பாட்டிகள் ஆவர். எனவே, அவர்களைக் கடுமையாக எச்சரித்து உ.பி. மாநில வனத்துறை விடுவித்து விட்டது. இவர்களிடம் மீட்கப்பட்ட பாம்புகள் வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ் ஆக்ரா விலங்குகள் காப்பகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த சில நாட்களில் மீண்டும் அருகிலுள்ள காடுகளில் கொண்டுபோய் விடப்பட்டு விடும்.

ஆர்.ஷபிமுன்னா

SCROLL FOR NEXT