பெங்களூரு
கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா சுதந்திர தின விழாவில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, ''கன்னடர்களுக்கான வேலை வாய்ப்பு கர்நாடகாவில் குறைந்துவிட்டதாகக் குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால், அதில் உண்மையில்லை. கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு வேலைகளில் கண்டிப்பாக அதிக பங்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் நிலை.
அரசின் கொள்கைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. இந்த நாளில், இம்மண்ணின் மக்களுடைய உணர்வுகளை எங்கள் அரசு மதிக்கிறது. புரிந்துகொள்கிறது. கன்னடர்களின் சுய மரியாதையையும் வேலைவாய்ப்புகளையும் நாங்கள் உறுதி செய்வோம். அவற்றில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
அதே நேரத்தில் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், கர்நாடகாவுக்கு வேலை தேடி வந்தவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கத் தயாராக உள்ளோம்.
கன்னடர்களைப் போலவே கர்நாடகாவுக்கு இடம்பெயரும் மக்கள், தங்களின் அடையாளங்களை இழக்காமல் கன்னட கலாச்சாரம், வாழ்க்கை முறை, மொழி ஆகியவற்றுக்குப் பழகிக்கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் கர்நாடகா முக்கிய இடத்தில் உள்ளது. நலமும் வளமும் கொண்ட கர்நாடகத்தை உருவாக்குவதில் பாஜக அரசு முக்கியப் பங்காற்றுகிறது'' என்றார் எடியூரப்பா.
கர்நாடகாவில் நேற்று (புதன்கிழமை) உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் கண்டனக் குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ