இந்தியா

சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறிய நீரஜ் சேகர் பாஜக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி

செய்திப்பிரிவு

லக்னோ

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் பாஜக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர். இவர் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு
ஏற்றுக் கொண்டார்.

பதவி விலகிய நீரஜ் சேகர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் அவர் மீண்டும் பாஜக சார்பில் உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதன்படியே அவர் பாஜகவில் இணைந்தார். நீரஜ் சேகரின் ராஜினாமாவால் மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சியின் பலம் 9 ஆக குறைந்தது.

இந்தநிலையில் எதிர்பார்த்தபடியே, தான் ராஜினாமா செய்ததால் காலியான இடத்தில் நீரஜ் சேகர் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக நிர்வாகிகள் உடன் வந்தனர்.
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பாஜகவுக்கு அதிகமான பெரும்பான்மை உள்ளது. எனவே நீரஜ் சேகர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT