இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் வீட்டை இழந்த பெண் தான் எழுதிய மனுவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது வீசினார். உடனே காரை நிறுத்திய நிர்மலா சீதாராமன் அதிகாரியை அழைத்து, அந்த பெண்ணுக்கான தீர்வுக்கு வழிகாட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது வெள்ளத்தில் வீட்டை இழந்த பெண் ஒருவர் அது தொடர்பாக மனு அளிக்க முயற்சித்தார். ஆனால் கூட்ட நெருக்கடியில் அவரால், நிர்மலா சீதாராமனை நெருங்கி கோரிக்கை மனுவை அளிக்க முடியவில்லை.
இதனால் கோபமடைந்த பெண் அந்த மனுவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற கார் மீது வீசி எறிந்தார். அதிர்ச்சி அடைந்த நிர்மலா சீதாராமன் உடனடியாக காரை நிறுத்தி, அந்த மனுவை எடுத்து பார்த்தார். அந்த பெண்ணை வரவழைத்து கோரிக்கைகளைக் கேட்டார். அப்போது அந்த பெண் வெள்ளத்தில் வீடு அடித்து செல்லப்பட்டதால் புதிய வீடு கட்டித்தருமாறு கோரினார்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் அந்த பெண் வீசியெறிந்த மனுவை அவரின் கையிலே கொடுத்து உரிய அதிகாரியிடம் நேரில் கொடுக்கச் செய்தார். மேலும் அந்த பெண்ணிடம், ‘வீட்டிற் காக நீங்கள் அழ வேண்டிய அவசியம் இல்லை. அதே போல கடிதத்தை இப்படி வீசியெறியவும் கூடாது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும். அதற்கு இந்த அதிகாரி தான் பொறுப்பு. அவரை தொடர்பு கொள்ளுங்கள்' என்றார்.
மத்திய அமைச்சரின் உடனடி நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்த, அந்த பெண் மட்டுமல்லாமல் அங்கிருந்த மக்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.