கேரள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்திருக்கும் நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு மிகுந்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாக்குளம், இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களுக்கு செவ்வாயன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதிகள் மெதுவே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. புதன்கிழமை மலப்புரம், கோழிக்கோடு ஆகியவற்றுகும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால் கேரளாவின் பல பகுதிகளிலும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை மைய தலைமை இயக்குநர் கே.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுதும் 1332 முகாம்களில் சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலப்புரம், வயநாடு பகுதிகளில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவுக்கு உடனடி நிவாரணமாக மத்திய அரசு ரூ.52 கோடி அளித்துள்ளது, பாதிக்கப்பட்டோருக்காக 3 மாத காலம் ரேஷன் பொருட்களை இலவசமாக அளிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் ரூ.4 கோடி பெறுமான மருந்துப் பொருட்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா, வீடு திரும்பும் மக்கள் தங்கள் வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விடுவார்கள். இதற்காக சிறப்பு மன ஆலோசனைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். நேரடியாக வெள்ள நீருடன் தொடர்புடையவர்கள் ‘டாக்ஸிசைக்ளின்’ ஆன்ட்டி பயாடிக் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கடற்கரை மாவட்டங்களுக்கு மேலும் மழை உண்டு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வருவது பெரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.