ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வெளிஉலக தொடர்பு இல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டு இருப்பதால், 2 நிமிடங்கள் தங்களின் அன்புக்குரியவர்கள், உறவினர்களிடம் பேச 2 மணிநேரம் துணை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அரசியலமைப்பின் 370 பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப்பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது.
காஷ்மீரில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்த 4-ம் தேதியில்இருந்து பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப்பின் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களி்ல ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளியே நடமாடுகின்றனர்.
செல்போன், லேண்ட்லைன், இன்டர்நெட், செய்தி சேனல்கள், நாளேடுகள் என எந்தவிதமான தகவல் தொடர்பும் இன்றி, காஷ்மீருக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மக்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈகைத் திருநாளுக்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் ஓரளவுக்கு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஈகைத்திருநாள் முடிந்தபின் மீண்டும் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடங்கியுள்ளன.
மக்கள் தங்களின் அன்புக்குரியவர்கள், உறவினர்கள், பிள்ளைகள் நண்பர்களிடம் பேசுவதற்காக மட்டும் ஸ்ரீநகர் போலீஸ் துணை ஆணையர் அலுவலகத்தில் தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் மக்களுக்கு அவசர செய்திகளை பரிமாறிக்கொள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே ஒரு நபருக்கு வழங்கப்படும் நிலையில் அந்த 2 நிமிட பேச்சுக்காக மக்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " மக்களுக்கு ஏற்படும் அசவுகரியக்குறைவு, உயிரிழப்பு இதில் எதற்கு சமநிலை அளித்தால் எதை நாங்கள் தேர்வு செய்வது. மக்கள் சந்திக்கும் அசவுகரியங்களை அரசு நிர்வாகம் அறியும், அதற்கேற்றார்போல் வரும்காலத்தில் கெடுபிடிகள் குறையும். எந்த முடிவு எடுத்தாலும் அது அந்தந்த உள்ளூர் நிர்வாகம்தான்எடுக்கும்" எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் ஸ்ரீநகரில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், " வரும் காலங்களில் மாநிலத்தில் கெடுபிடிகள் குறையும் என்று நம்புகிறேன். சுதந்திரதினத்தன்று அணிவகுப்பு அனைத்தும் முடிந்தபின் மாநிலத்தில் இன்னும் கெடுபிடிகள் குறையும். மக்கள் சந்திக்கும் அசவுகரியங்கள் குறையும்" எனத் தெரிவித்தார்.
ஸ்ரீநகர் துணை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக டெல்லியில் வசிக்கும் தனது தங்கையிடம் பேச 2 மணிநேரம் வரிசையில் காத்திருந்து பேசி முடித்து கண்ணீருடன் வந்தார். அவர் கூறுகையில், " எனது தந்தைக்கு சமீபத்தில் டெல்லியில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. நான் கடந்த மாத இறுதியில்தான் இங்கு தந்தையை அழைத்துக் கொண்டு வந்தேன். இப்போது அவருக்கு மருந்து இல்லை, என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் என் தங்கைக்கு நான் பேசி மருந்துக்கு ஏற்பாடு செய்யக் கூறினேன்" எனத் தெரிவித்தார்.
முகமது அஷ்ரப் என்பவர் தனது மகன் ஹமாஸ்க்கு தொலைபேசியில் பேசினார். பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி முகமது அஷ்ரப் கீழே விழுந்தார்.உடனே அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்பினர்.அவரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், " என் மகனுடன் என் தந்தை வசித்து வந்தார். அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டபோது, அவர் இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டது என்கிறார். இங்கு தொலைத் தொடர்பு இல்லாததால் என் தந்தை இறந்த விஷயம் எனக்குத் தெரியவில்லை" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
அரசின் புள்ளிவிவரங்கள்படி மாநிலத்தில் 87 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது செல்போன் சேவை துண்டிப்பால் மக்களால் எந்த தகவலையும் யாரிடமும் பகிரமுடியவில்லை.
காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து மூத்த போஸீல் அதிகாரி ஒருவர் கூறுகையில், " செல்போன் சேவை இருந்தால் பொய்யான தகவல்களும், வதந்திகளும் பரவுகின்றன. சமீபத்தில் ஒரு சேனல் காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக செய்தி வெளியி்டடது. ஆனால், எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. மொபைல் சேவை இருந்தாலே, தேவையில்லாத தவறான, பொய்யான தகவல்கள் செல்லும் என்பதால்முடக்கப்பட்டது " எனத் தெரிவித்தார்.
இருப்பினும், மக்கள் தங்களின் உறவுகள், நண்பர்கள், குடும்பத்தாரிடம் பேசுவதற்காக போலீஸார் தரைவழித் தொலைபேசியை பயன்படுத்திக்கொள்ள மட்டும் அனுமதிக்கிறார்கள்.
பிடிஐ