பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

மருந்து வாங்க மனைவி 30 ரூபாய் கேட்டதால் 'தலாக்': கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

ஹபுர்,

உடல்நிலை சரியில்லாமல் இருந்த மனைவி மருந்து வாங்க 30 ரூபாய் கேட்டதால், அவருக்கு தலாக் சொல்லி வீட்டை விட்டு அனுப்பிய கணவர் மீது போலீஸார் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் தாலுகா போலீஸில் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் கூறியதாவது:
''ஹபூர் நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த முஸ்லிம் பெண்ணுக்கு திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அந்தப் பெண், மருந்து வாங்கப் பணமில்லாமல் கணவரிடம் 30 ரூபாய் கேட்டுள்ளார். மனைவி பணம் கேட்டதால், அவரைத் தாக்கிய கணவர் முத்தலாக் கூறி, அடித்து வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். குழந்தையையும் தன்ன்னுடன் வைத்துக்கொண்டார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், ஹபூர் நகர போலீஸ் நிலையத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். போலீஸார் அந்த புகாரைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கூறுகையில், "எனக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. எனக்கு மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக எனது கணவரிடம் 30 ரூபாய் கேட்டேன். அதற்கு கடுமையாக கூச்சலிட்டு, என்னை அவதூறாகப் பேசிய எனது கணவர், எனக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டுத் துரத்தினார். கணவரின் குடும்பத்தினரும் என்னைத் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். எனது குழந்தையையும் பிடுங்கிக்கொண்டனர்" எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவந்த பின், கணவரால் முத்தலாக் கூறி பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் போலீஸாரிடம் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில் உ.பி. மாநிலம் சீதாபூரில் முத்தலாக் கூறிய கணவர் மீது புகார் அளித்த பெண் புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கணவரின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண் மறுக்கவே, திடீரென அவரின் மூக்கை அறுத்துள்ளனர்.


ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT