இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு பாதுகாப்புப் படையினரும் பண்டிகையன்று இனிப்புகள் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்காளதேசம் எல்லையில் இது நடப்பதுண்டு.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால் இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலானஅனைத்து உறவுகளையும் முறித்துள்ளது பாகிஸ்தான்.
இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் பரிமாற்றம் செய்து கொள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள்பாகிஸ்தான் அதிகாரிளிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.
“வழக்கமாக ஈத், ஹோலி, தீபாவளி பண்டிகையின் போது இந்தியா-பாகிஸ்தான் எல்லை ராணுவ வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிக் கொள்வது வழக்கம், ஆனால் இந்த முறை அவர்கள் மறுத்து விட்டதால் பரிமாற்றம் நடைபெறவில்லை “ என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இந்திய-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு வீரர்களிடையே இனிப்புப் பரிமாற்றங்கள் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இந்நிகழ்வு நடைபெறவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லையில் பக்ரீத், ஹோலி, தீபாவளி மற்றும் இருநாட்டின் தேசிய நாள் ஆகியவற்றின் போது இனிப்பு பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.